திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள - ஊராட்சித் தலைவர்களுடன் ஆட்சியர் ஆலோசனை : தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று ஆலோசனை நடத்தினார்.

திருச்சி மாநகராட்சியுடன் அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட மருதாண்டாகுறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட முடிகண்டம், மேக்குடி, கே.கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர், திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட பனையக்குறிச்சி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி, கீழக்குறிச்சி, லால்குடி ஒன்றியத்துக்குட்பட்ட தாளக்குடி, மாடக்குடி, அப்பாதுரை, எசனைக்கோரை, புதுக்குடி, மண்ணச்சநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட மாதவபெருமாள் கோவில், பிச்சாண்டார் கோவில், கூத்தூர் ஆகிய 25 ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன. இதேபோல, முசிறி மற்றும் லால்குடி பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. மாநகராட்சியுடன் இணைப்பதற்கு சில ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் தரம் உயர்த்தப்படவுள்ள லால்குடி, முசிறி ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 5 ஊராட்சி மன்றத் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வி.பிச்சை, மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சிவராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் சௌ.கங்காதாரிணி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பி.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பும் வகையில், தொடர்புடைய ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்