ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் குழுத்தலைவர் ஈரோடு எம்.பி. அ.கணேசமூர்த்தி, திருப்பூர் எம்பி சுப்பராயன், ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ், 2016 முதல் தற்போது வரை 4429 குடியிருப்புகள் ரூ.7.52 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.319.19 கோடி வழங்கப்பட்டுள்ளது. தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் 380 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.933.10 கோடி மதிப்பீட்டில் 42 திட்டப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 16 பணிகள் ரூ.277.50 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபி, பவானி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளிலும் பையோமைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் 20 ஆயிரத்து 648 தனிநபர் வீடுகளில் ரூ.16.44 கோடி மதிப்பீட்டில் தனிநபர் கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகளுக்கும் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பேரூராட்சிகளாக மத்திய அரசின் தர ஆய்வுக்குழுவால் சான்று வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆய்வு அட்டைகள் மற்றும் ஆய்வுப்பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ், அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஒருங்குமுறை விற்பனைக்கூடங்களில் தேசிய வேளாண் சந்தை தொடங்கப்பட்டு, மஞ்சள், எள், நிலக்கடலை, நெல், மக்காச்சோளம், தேங்காய் உள்ளிட்ட விளை பொருட்கள் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago