நீர்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து - பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டிய நிலையில், பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பவானிசாகர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி நீர் திறக்கப்பட்டது. ஆனால், நசியனூர் அருகே கால்வாய் கரை கட்டுமானத்தில் ஏற்பட்ட உடைப்பால், நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிகள் முடிந்து, கரையின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டபின்பே கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். ஆனால், அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, செப்டம்பர் 30-ம் தேதி வரை அணையில் 102 அடி வரை மட்டுமே நீரினைத் தேக்க முடியும். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டியது. இதையடுத்து பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 2300 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.

உபரிநீர் திறக்கப்படுவது குறித்து ஏற்கெனவே, கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து கரையோரங்களில் வரு வாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக (30.31 டிஎம்சி) இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2863 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து உபரி நீராக பவானி ஆற்றில் விநாடிக்கு 2300 கனஅடி நீரும், காலிங்கராயன் பாசனத்துக்கு 500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. அணையில் 102 அடிக்கு மேல் நீர் தேக்கக்கூடாது என்பதால், அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்