ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாகனூர் ஊராட்சி தோமையார்புரம் கிராம மக்கள், தரைப்பாலத்தைப் புதுப்பிக்க உள்ளதை நிறுத்தி உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலாவிடம் மனு அளித்தனர். ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து தோமையார்புரத்தைச் சேர்ந்த அய்யர் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் மணிமுத்தாறின் குறுக்கே ராமநாதபுரம்-புதுக்கோட்டை மாவட்டங்களை இணைக்கும் சாலையில் தரைப்பாலம் உள்ளது. இப்பாலத்தில் மழை, வெள்ளக் காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆண்டாவூரணியில் உள்ள பள்ளிக்கும் மாணவர்கள் செல்ல முடிவதில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக உயர்மட்டப் பாலம் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே, இப்பாலத்தை ரூ.65 லட்சம் செலவில் புதுப்பிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இப்பாலத்தைப் புதுப்பித்தாலும் மழை, வெள்ளக் காலங்களில் பயன்படுத்த முடியாது. எனவே, இப்பணியை நிறுத்தி உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago