நாளை முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம் - நெல்லையில் பள்ளிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படவுள்ள நிலையில் வகுப்பறைகளில் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளை முதல் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் வகுப்பறைகள், கழிவறைகள், வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அலுவலர்களும், பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். வகுப்பறைகளில் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருநெல்வேலி மாநகராட்சியில் 4 மண்டலங்கள் மற்றும் மாவட்டத்தில் 9 வட்டாரங்களில் குழுக்கள் அமைக் கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் ஆயிரம் பேரில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. பள்ளிகள் தொடங்கியது முதல் 45 நாட்களுக்கு ஏற்கெனவே ஆன்லைன் மூலம் நடத்திய பாடங்களையே நடத்தி, மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்