நெல்லை மற்றும் இடிந்தகரையில் - காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம் :

திருநெல்வேலி மற்றும் இடிந்தகரை பகுதிகளில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் நேதாஜி சாலை, இளங்கோவடிகள் தெரு, கண்ணப்பநாயனார் தெரு, திருவள்ளுவர் தெரு, முத்தமிழ் தெரு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளுக்கு கடந்தஒன்றரை மாதமாக 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் ஒரு மணிநேரம் மட்டுமே குடிநீர் கிடைப்பதால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தட்டுப்பாடுள்ள பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது. கடந்த சில நாட்களாக லாரிகள் மூலமும் தண்ணீர் வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்து, கொக்கிரகுளத்தில் மாரியம்மன் கோயில் தெரு, கண்ணப்பநாயனார் தெருஆகிய இரு இடங்களில் நேற்றுகாலை பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலப்பாளையம் சாலையில் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்தனர். அவ்வழியாக வந்தஅரசுப் பேருந்தையும் சிறைபிடித்தனர். அங்கு பரபரப்பு நிலவியது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்தும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுவது குறித்து பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். அதிகாரிகளும், போலீஸாரும் அங்குவந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து ஒன்றரை மணி நேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

இடிந்தகரை

திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை கிராமமான இடிந்தகரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் பெண்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்