பாளையங்கோட்டையில் வங்கி மேலாளர் மற்றும் மின்வாரிய முன்னாள் அதிகாரி வீடுகளில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டுள்ளன.
பாளையங்கோட்டை மகாராஜநகர் ஐஓபி காலனி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். திருநெல்வேலியிலுள்ள வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். கடந்த 27-ம் தேதி உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்தார். நேற்று காலையில் திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்துகிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.8.50 லட்சம் மதிப்பிலான நகைகள்திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் அவர் புகார் செய்தார்.
இதுபோல், பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் எதிரேயுள்ள பெல் அமோசர்ஸ் காலனியில் உள்ள வீட்டில், மின்வாரிய ஓய்வுபெற்ற அதிகாரி ஞானகுரு என்பவரது வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்குமுன் வீட்டை பூட்டிவிட்டு ஞானகுரு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருந்தார். நேற்று காலையில் திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, வரவேற்பரையில் இருந்த டிவி, மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருந்தன.
இவ்விரு புகார்களின்பேரில் குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான பாளையங்கோட்டை போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago