அம்ருத் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு :

வேலூர் மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் பயன் பாட்டை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

வேலூர் மாநகராட்சியில் மத்திய அரசின் குடிநீர் அபிவிருத்தி (அம்ருத்) திட்டத்தின் கீழ் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.234.93 கோடியில் புதிய குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, தொரப்பாடி, சங்கரன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் 16 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப் பட்டுள்ளன.

இதனை, காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி, காட்பாடி காந்திநகர் இ.பி. காலனி யில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது, மாநக ராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

வேலூர் மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மொத்தம் 222 கி.மீ. தொலைவுக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 70 ஆயிரத்து 795 குடும்பங்கள் பயன் பெறுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE