கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டினால், உபரிநீர் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் 2.50 லட்சம் ஏக்கர்நிலம் பாசனம் பெறுகிறது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்தில் நெல் அறுவடைப்பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், காலிங்கராயன் பாசனத்தில் நாற்று நடும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், கீழ்பவானி பாசனத்துக்கு கடந்த 15-ம் தேதி திறக்கப்பட்ட நீர், கரை உடைப்பின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. கரை உடைப்பு சரி செய்யப்படும் வரை பாசனத்துக்கு நீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பவானிசாகர் அணையில் 105 அடிவரை நீரினைத் தேக்கி வைக்க முடியும் என்றாலும், அணையின் பாதுகாப்பு கருதி, குறிப்பிட்ட மாதங்களில், குறிப்பிட்ட அளவு நீரினை மட்டும் தேக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை அணையில் 102 அடி வரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும். அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் அணையின் முழு அளவான 105 அடிவரை தேக்கி வைக்கலாம்.
இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை அதிகரித்துள்ளதால், அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 2821 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 101.75 அடியாகவும், நீர் இருப்பு 30.11 டிஎம்சியாகவும் இருந்தது. காலிங்கராயன் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடியும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகிறது.
பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 102 அடியை எட்டும்போது, உபரிநீரை ஆற்றில் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனக்கால்வாயில் உடைப்பு ஏற்படாமல் இருந்தால், அணையின் நீர்மட்டம் 102 அடிக்குள் கட்டுப்படுத்தப்பட்டு, உபரிநீர் வெளியேற்றம் தடுக்கப்பட்டு இருக்கும் என ஆதங்கம் தெரிவித்த விவசாயிகள், சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து, உபரிநீர் வெளியேற்றத்தைத் தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago