திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அணைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள தடை உத்தரவு வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம் பூண்டி மருத்துவ வட்டாரத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகள் ஆகியவை இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப் பட்டிருந்தது. கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, அனைத்து கடைகளும் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
சமூக இடைவெளி மற்றும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு மற்றும் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவார்கள். வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும், உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
அபராதம் விதிக்கப்படும்
ஆய்வு செய்யும்போது முகக் கவசம் அணியாமல் இருப்பதும் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பது கண்டறியப் பட்டால் அபராதம் விதிக்கப்படும். மேலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டும் என்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அணைகளை பார்வையிட மக்கள் செல்வதற்கான தடை வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து
திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்வதற்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.திருவண்ணாமலையில் இருந்து மஷார்-க்கு காலை 8.25 மணிக்கும், காஞ்சிக்கு காலை 8 மணிக்கும், செங்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு காலை 7.55 மணிக்கும், தேவிகாபுரத்தில் இருந்து ஆரணிக்கு காலை 7.30 மணிக்கும், போளூரில் இருந்து ஆரணிக்கு காலை 7.45 மணிக்கும், அரியூரில் இருந்து செய்யாறுக்கு காலை 7.15 மணிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago