மத்திய மண்டலத்தில் போக்ஸோ வழக்கில் கைதான 184 பேர் மீது சரித்திர பதிவேடு தொடங்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் 29 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிராக தொடர் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க தற்போது 184 பேர் மீது சரித்திர பதிவேடு (ஹிஸ்ட்ரி ஷீட்) தொடங்கப்பட்டு, அவர்களின் நடத்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 46 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 35 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
பொதுவாக ரவுடிகள் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்காகவே சரித்திர பதிவேடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய மண்டலத்தில் போக்ஸோ வழக்கில் தொடர்புடையவர்களுக்கு எதிராகவும் சரித்திர பதிவேடுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளோம். இவர்கள், பாதிக்கப்பட்ட குழந்தையையோ, அவர்களின் உறவினர்களையோ மிரட்டாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பும் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது.
போக்ஸோ வழக்கில் தொடர்புடையவர்கள் மீண்டும் ஒரு முறை குற்றம் செய்வதற்கான வாய்ப்பை முழுமையாக ஒழிக்கக்கூடிய வகையில்தான் இந்த சரித்திரப் பதிவேடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
போக்ஸோ சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ளவர்களை ரோந்து காவலர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பர். மத்திய மண்டலத்தில் நிலுவையில் உள்ள போக்ஸோ வழக்குகள் மீதான புலன் விசாரணையைத் துரிதப்படுத்தி, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago