நம் நாட்டுக்கு அதிக பதக்கங்கள் பெற்றுத் தர கடுமையாக உழைப்பேன் என தடகள வீராங்கனை தனலட்சுமி தெரிவித்தார்.
ஹாக்கி ஒலிம்பிக் வீரரான தயான்சந்த் சிங்கின் பிறந்தநாளான ஆக.29-ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மதி இந்திரா காந்தி கல்லூரியில் நேற்று நடைபெற்ற தேசிய விளையாட்டு தின விழாவுக்கு கல்லூரிச் செயலாளர் கே.மீனா தலைமை வகித்துப் பேசியது:
கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகள் விளையாட்டுக்கும் அளிக்க வேண்டும். விளையாட்டே உடலையும், மனதையும் ஒருநிலைப்படுத்தும். உடலும், மனதும் ஆரோக்கியத்துடன் இருக்க விளையாட்டு ஒரு மிகச்சிறந்த மருந்தாகும் என்றார்.
சிறப்பு விருந்தினராக டோக்கியோ ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்ற தனலட்சுமியுடன் கல்லூரியின் தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன் கலந்துரையாடினார்.
அப்போது தனலட்சுமி பேசியது: எனக்கு சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் இருந்தது. தொடர்ந்து பயிற்சியாளர்கள் அளித்த பயிற்சி, பெற்றோர் அளித்த ஊக்கம் ஆகியவையே விளையாட்டில் முன்னேற காரணங்களாக அமைந்தன. கரோனா பரவல் அதிகமாக இருந்தபோதும் வீட்டுக்கு அருகிலுள்ள மைதானத்தில் பயிற்சி செய்து வந்தேன். அனைத்திந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான தடகளப் போட்டியில் தங்கம் வென்றதை மறக்க முடியாது. நம் நாட்டுக்காக அதிக பதக்கங்கள் பெற கடுமையாக உழைப்பேன். பிரதமரை சந்தித்து பேசியது பெருமையாக உள்ளது. எனக்கு அரசுப் பணி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் எழுப்பிய வினாக்களுக்கும் அவர் பதிலளித்தார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் வித்யாலட்சுமி வரவேற்றார். உடற்கல்வித்துறை இயக்குநர் மகேஸ்வரி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago