ரேஷன் பொருள் கடத்தல் பற்றி புகார் கூற வசதி :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட வழங்கல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உணவுப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் பாளையங்கோட்டை பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, திம்மராஜபுரம் பகுதியில் பொது விநியோகத்திட்ட அரிசி, 23 மூட்டைகளில் மொத்தம் 690 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப் பட்டது. இது தொடர்பாக திம்மராஜபுரம் அன்னை ஆரோக்கிய பபிலா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நியாய விலை கடையில் பெறப்படும் பொது விநியோகத் திட்டப் பொருட்களை யாராவது வெளிச் சந்தையில் விற்றாலோ அல்லது வாங்கினாலோ, அவர்கள் மீது அத்தியாவசிய குடிமைப் பொருட்கள் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

“உரிமம் விட்டுக் கொடுத்தல்”

குடும்ப அட்டைதாரர், தான் வெளியூர் செல்வது அல்லது வேறு காரணங்களுக்காக நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது அனைத்துமோ தற்காலிகமாக தேவையில்லை எனில் TNEPDS என்ற செயலியில் “உரிமம் விட்டுக் கொடுத்தல்” என்ற மெனுவைத் தேர்வு செய்து மேற்படி விவரத்தை பதிவு செய்யலாம். www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும் சென்று தங்களுக்கு எவ்வளவு காலத்துக்கு பொருட்கள் தேவையில்லை என்பதை பதிவு செய்யலாம். குடும்ப அட்டையின் மூலம் தொடர்ந்து எந்த பொருட்களும் பெறாவிட்டாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படமாட்டாது.

கட்டுப்பாட்டு அறை

பொது மக்கள் தங்கள் பகுதியில் பொதுவிநியோகத்திட்ட பொருட்களை யாராவது வெளிச்சந்தையில் விற்றாலோ அல்லது வாங்கினாலோ, திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 93424 71314-ல் தெரிவிக்கலாம். மேலும், 94450 00379 என்ற எண்ணுக்கு Whats App மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம். பொது மக்களிட மிருந்து வரப்பெறும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE