உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் - கடும் குடிநீர் தட்டுப்பாடு: அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து கிராம மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தின் வழியாக உளுந்தூர்பேட்டை - திருவெண்ணைநல்லூர் சாலை விரிவாக்கப் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் ஓரமாக புதைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டன. அதற்கு மாற்று வழிகள் ஏதும் செய்யப்படாததால் பாண்டூர் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்காக 2.கி.மீ தொலைவில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வலியறுத்தி உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளுக்கு தொடர்ந்து பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உளுந்தூர் பேட்டை பகுதியில் கடந்த சில வாரங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்கள் இயக்கப்படாததால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று உளுந்தூர்பேட்டை- திருவெண்ணைநல்லூர் சாலையில் பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பேரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்