நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு : முன்பதிவு செய்தவர்களுக்கே விற்பனை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் தேவையான இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முன்பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இருந்ததால், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் கார் பருவ நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுள்ளது. தற்போது கார் பருவ நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. விவசாயிகளிடம் அறுவடை செய்யப்பட உள்ள நெல்லை கொள்முதல் செய்திட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் உடனடியாக தாங்கள் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்திட ஏதுவாக, அறுவடைக்கு முன்பே விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் நேரடியாக சென்று முன்பதிவு செய்திட வேண்டும். முன்பதிவு செய்ய செல்லும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, பட்டா அல்லது பத்திரம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகலினை கிராம நிர்வாக அலுவலரிடம் காண்பித்து தங்களுடைய பெயர் மற்றும் முகவரி, சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவு, சர்வே எண், அலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும். குத்தகைதாரராக இருந்தால் குத்தகைக்கான ஆவணத்தினை காண்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். கோயில் அல்லது மடத்துக்கு சொந்தமான நிலத்தில் பயிர் செய்துள்ளவர்கள் கோயில் நிர்வாக அலுவலரிடம் பெற்ற அடைவோலை ரசீது நகலினை காண்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் விற்பனை செய்ய உள்ள விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இவ்விற்பனையின் போது இடைத்தரகர்கள் தலையிடும் பட்சத்தில் அவர்கள் மீது காவல் துறை மூலம் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இது சம்பந்தமான புகார்களுக்கு மண்டல மேலாளரை 94436 95551 மற்றும் தரக்கட்டுப்பாடு மேலாளரை 93456 35678 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலர்களிடம் முன்பதிவு செய்யும் விவசாயிகள் மட்டுமே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தாங்கள் அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கே முழு பலன் கிடைக்க வேண்டும் என்பதாலும் வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் பலனடைவதை தடுப்பதற்காகவும் இந்த முன்பதிவு முறை செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்