பழங்குடியின மாணவர்கள் தடையின்றி கல்வி பயிலும் வகையில், தாளவாடியில் புதிய கல்லூரி அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கு மலைக்கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியில், ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி உள்ளது. வனப்பகுதியையொட்டியுள்ள தாளவாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மாணவர்கள், உயர்கல்வி பயில சத்தியமங்கலம் அல்லது கோவைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், தாளவாடியில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் நேற்று அறிவிக்கப்பட்டதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாளவாடி வட்டாரத்தில் தாளவாடி, பனஹள்ளி, கோட்டமாளம் மற்றும் ஆசனூர் உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய நான்கு அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இது தவிர இரு தனியார் மேல்நிலைப்பள்ளிகளும் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, சராசரியாக 500 மாணவ, மாணவியர் ஆண்டுதோறும் உயர்கல்விக்காக வரும் சூழல் உள்ளது. இது தவிர 7 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இம்மாணவர்கள் உயர்கல்வி பயில புதிய கல்லூரி தொடக்கம் உதவியாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:
கல்வியில் பின் தங்கிய பகுதிகளாக ஈரோடு மாவட்டத்தில் 5 வட்டாரங்கள் உள்ளன. அதில் தாளவாடியும் ஒன்று. 10 ஊராட்சிகளை உள்ளடக்கிய தாளவாடி வட்டாரத்தில் உரிய போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.
மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவர்கள் மேற்படிப்பிற்கு செல்லாமல், ஏதேனும் ஒரு வேலைக்கு செல்வதும், மாணவிகளுக்கு உடனடியாக திருமணம் நிச்சயிப்பதும் இப்பகுதியில் வாடிக்கையாக உள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பழங்குடி குழந்தைகள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையிலும் தொலைநோக்குப் பார்வையில் புதிய கல்லூரி குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago