மத்திய அரசின் திட்டத்தின் கீழ், ஈரோட்டில் செயல்படும் மஞ்சள் பதப்படுத்தும் நிறுவனங்கள், மானியத்துடன் கூடிய நிதியுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் விதமாக, பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில், மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
ஏற்கெனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்ப பயிற்சிகள் போன்றவற்றிற்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படும். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளும் நிதி உதவி பெறலாம்.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அடிப்படையில் ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் ஏற்கெனவே இயங்கி வரும் மஞ்சள் பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதியதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய நிதியுதவி பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண் வணிக துணை இயக்குநரை (0424-2339889) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago