திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தண்ணீறின்றி நெற்பயிர்கள் கருகுவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அம்பாசமுத்திரம் வட்டம், பாபநாசம் அணையில் இருந்து வடக்கு கோடைமேல் அழகியான் கால்வாய் வழியாக தண்ணீர் பெறும் கடைமடை பாசன குளமான வாகைகுளத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதாக, காணொலி காட்சி வாயிலாக கடந்த சில நாட்களுக்குமுன் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட குளம் மற்றும் பயிர்கள் நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தனர். `அக்குளத்துக்கு தண்ணீர் கிடைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இக்குளத்தின் மூலம் பாசனம் பெறும் ஆயக்கட்டு பரப்பில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை மூலம் கூட்டாய்வு மேற்கொள்ளப்படும். நடப்பு கார் பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தேவைப்படும் இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்’ என மாவட்ட ஆட்சியர் அப்போது உறுதி தெரிவித்தார்.
வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டி, செயற்பொறியாளர் (தாமிரபரணி வடிநிலக்கோட்டம்) அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார் உட்பட வேளாண்மை துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago