திருவண்ணாமலை ‘ரிங் ரோடு' திட்டத்துக்கு - கையகப்படுத்தும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் விலை நிர்ணயம் : நில உரிமையாளர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை சுற்று வட்ட பாதை (ரிங்ரோடு) திட்டத்துக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என நில உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை நகரை மையமாக வைத்து, ‘சுற்று வட்ட பாதை’ (ரிங்ரோடு) திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இது, ஒன்பது வழித்தடங்களை இணைக்கும் திட்டமாகும். இதன்மூலம் பிரசித்திப்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, பவுர்ணமி கிரிவலம் உட்பட அனைத்து விழா நாட்களிலும் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என கணிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி வேலூர் சாலையில் இருந்து சென்னை, விழுப்புரம், திருக்கோவிலூர் மற்றும் செங்கம் சாலையை இணைக்கும் பணி முதற்கட்டமாக நிறைவு பெற்றது. இதற்காக, நிலம் கையகப்படுத்தி சாலை அமைக் கப்பட்டது. அதன்பிறகு செங்கம் சாலையில் இருந்து வேலூர் சாலையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்துதல், நிலத்துக்கு விலை நிர்ணயம் செய்து மக்களிடம் கருத்து கேட்பு உள்ளிட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால், ‘சுற்று வட்ட பாதை’ திட்டம் முழுமை பெறவில்லை. இதேபோல், திருக்கோவிலூர் – செங்கம் இடையே தார்ச்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அனைத்து தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் செங்கம் சாலையில் இருந்து வேலூர் சாலையை இணைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இதற்காக, அத்தி யந்தல், அடி அண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், வேங்கிக்கால் மற்றும் இனாம் காரியந்தல் கிராமங்களில் ‘சுற்று வட்ட பாதை’ திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

இதையொட்டி நிலம், வீட்டு மனைகள் மற்றும் கட்டிடங்களுக்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதற்கான விலை நிர்ணயம் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

அத்தியந்தல், அடி அண்ணாமலை மற்றும் தேவனந்தல் கிராமங்களில் நில உரிமையாளர் களை ஒருங்கிணைத்து தனித்தனி நாட்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வேங்கிக் கால் ஊராட்சிக்கு உட்பட நில உரிமையாளர்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் திருவண்ணா மலையில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி தலைமை வகித்தார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கிருஷ்ண மூர்த்தி, கண்காணிப்பாளர் துரைராஜ் மற்றும் வருவாய்த் துறையினர் பங்கேற்றனர். வேங்கிக்கால் ஊராட்சியில் 12,797 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த ரூ.28.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நில உரிமையாளர்களிடம் நிலம் கையகப்படுத் துவது தொடர்பான கருத்து கேட்பு நடைபெற்றது.

இதுகுறித்து கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, “நிலங்களுக்கான மதிப்பீட்டை, தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய” வலியுறுத்தியாக தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்