ஒரு குவிண்டால் கரும்புக்கு 5 ரூபாயை உயர்த்திய மத்திய அரசுக்கு தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய கரும்புகள் விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.ராஜ்குமார், பொதுச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-22-ம் பருவத்தில் ஒரு குவிண்டால் கரும்புக்கு 5 ரூபாயை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலமாக ஒரு டன் கரும்புக்கு ரூ.50 மட்டுமே கிடைக்கும். ஒரு டன் கரும்புக்கு ரூ.2,900 என்ற கட்டுப்படியாத விலையை மத்திய அரசு அறிவித் துள்ளது. கடந்தாண்டு ஒரு ஒரு டன் கரும்பு விலை ரூ.2,850 ஆகும்.
உரங்களின் விலை மற்றும் டீசல் விலையை கடுமையாக மத்திய பாஜக அரசு உயர்த்திக் கொண்டே வரும் நிலையில், கரும்பு சாகுபடி செலவுக்கு ஏற்ற விலையை உயர்த்தவில்லை. 9.5 சதவீதம் பிழித்திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ரூ.3,500-ஐ வயல் விலையாக வழங்க வேண்டும். இந்த தொகையை அனைத்து மாநிலங்களிலும் அறிவித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயி களுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை ரூ.25 ஆயிரம் கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. கரும்பு விலையை உயர்த்தி அறிவிக்கக்கோரி கரும்பு விவ சாயிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.
புதுடெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில் உள்ளன. இப்போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி, கன்னியாகுமரியில் இருந்து புதுடெல்லி ராஜ்காட் வரை செல்லும் ‘உழவர்கள் ரத யாத்திரை’க்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago