ஈரோடு மாவட்டத்தில் - பாசனப்பணிகளுக்குத் தேவையான உரம் கையிருப்பு : வேளாண் இணை இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் பாசனப்பணிகளுக்குத் தேவையான அளவு உரம் இருப்பில் உள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்கள் உட்பட 556 உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. காலிங்கராயன் பாசனத்தில் நடவுப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மாவட்டத்தில் உரம் இருப்பு குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காக 21-ம் தேதி, 524 மெட்ரிக் டன் யூரியா உரம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வார இறுதிக்குள் 830 மெட்ரிக் டன் யூரியா பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் யூரியா 1774 மெ.டன்னும், டி.ஏ.பி 2418, பொட்டாஷ் 2880, காம்ப்ளக்ஸ் 7652 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உரங்களின் விலைப்பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். உரங்கள் கொள்முதல், விற்பனை ரசீது வழங்குதல், அனைத்து விற்பனைகளையும் பிஓஎஸ் விற்பனை முனைய இயந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்வது குறித்து உர விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, பரிந்துரைக்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் உரங்களை வாங்கும் போது, மூட்டையில் அச்சடிக்கப்பட்ட விலையினை பார்த்து உரிய ரசீது பெற்று உரங்களை வாங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்