திருமணிமுத்தாறு திட்டம் ஆய்வுக்கு எடுக்கப்பட்டிருப்பதற்கு கொமதேக வரவேற்பு :

நீர்வளத்துறையின் மானிய கோரிக்கையில் திருமணிமுத்தாறு திட்டத்தை ஆய்வுக்கு எடுத்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கக் கூடியது, என கொமதேக பொதுச்செயலாளர் எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீர்வளத்துறையின் மானிய கோரிக்கையில் மேட்டூர் உபரி நீரை கொண்டு நூற்றுக்கணக்கான ஏரி, குளங்களை நிரப்பி சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு பயன்தரக்கூடிய திருமணி முத்தாறு திட்டத்தை ஆய்வுக்கு எடுத்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கக்கூடிய திட்டமாகும்.

சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து நாமக்கல் மாவட்டம் பவித்திரம் வரை 132.305 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால் முதல் கட்டத்திலும், பவித்திரம் ஏரியிலிருந்து அய்யாறு ஆறு வரை 36.995 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால் 2-ம் கட்டத்திலும் சேர்த்து திருமணி முத்தாறு திட்டம் திட்டமிடப்படுகிறது. முதல் கட்டத்திற்கு ரூ.9,176 கோடி, இரண்டாம் கட்டத்திற்கு ரூ.1,060 கோடி என மொத்தமாக ரூ.10,236 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் 50,000 ஏக்கர் வரை பாசனம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக பல தரப்பும் போராடி வந்த போதும் கேட்பாரற்று கிடந்த திருமணிமுத்தாறு திட்டத்திற்கு உயிர் கொடுத்திருப்பதற்கு முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE