மக்காச்சோளம், நிலக்கடலை, எள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய 31-ம் தேதி கடைசி நாள் :

By செய்திப்பிரிவு

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, ராகி, எள், வெங்காயம், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களுக்கு வரும் 31-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் பயிர் காப்பீடு செய்யப்பட உள்ளது. பயிர் கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பெயரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர் கடன் பெறாதவர்கள், அடங்கல், விதைப்புச்சான்று, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா நகல் ஆகியவற்றைக் கொண்டு பொது சேவை மையங்கள், வேளாண் கூட்டுறவு சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

காப்பீடு கட்டணம்

மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.616, துவரை பயிருக்கு ரூ.342, நிலக்கடலைக்கு ரூ.621, ராகிக்கு ரூ.275.50, எள்ளுக்கு ஏக்கருக்கு ரூ.275 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும். தோட்டக்கலைப் பயிர்களில், வாழைக்கு ரூ.4272.5, மரவள்ளிக்கு ரூ.1849, வெங்காயத்திற்கு ரூ.2104, மஞ்சளுக்கு ரூ.4375, வெண்டைக்காய்க்கு ரூ.925, முட்டைக்கோஸ்க்கு ரூ.1100, உருளைக்கிழங்குக்கு ஏக்கருக்கு ரூ.2342.50-ம் காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.

மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, ராகி, எள், வெங்காயம், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களுக்கு வரும் 31-ம் தேதியும், வாழை, மஞ்சள், மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு செப்டம்பர் மாதம் 15-ம் தேதியும் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளாகும், என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்