ஆரணியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் 25-க்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி அதிகாரிகள் நேற்று மூடினர்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளன. திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளை திறக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் பிற பகுதிகளில் இரவு 10 மணி வரை கடைகள் செயல்பட அனு மதிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற அறி வுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் அனை வரும் கரோனா தடுப்பூசி செலுத்தி, அதற்கான சான்றுகளை உடன் வைத்திருக்க வேண்டும் மற்றும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களின் கடைகளை மூட வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆரணியில் நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று கடைகளில் ஆய்வு செய்தனர்.
நகராட்சி ஆணையாளர் ராஜவிஜய காமராஜ் தலைமையிலான குழுவினர் வஉசி தெரு, மண்டித் தெரு, காந்தி சாலை, மார்க்கெட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என ஆய்வு செய்தனர். அப்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் 25-க்கும் மேற்பட்ட கடைகளை மூடினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago