பணிநிரந்தரம், தொகுப்பூதியம் கோரி ஆஷா பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு :

By செய்திப்பிரிவு

தன்னார்வலர்களாக சுகாதாரத் துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

பின்னர் ஆஷா பணியாளர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளாக விடுப்பின்றி ஆஷா பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை பவர்காடு, சோளக்காடு, வெண்டலப்பாடி, முள்ளுக்குறிச்சி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொத்தம் 44 ஆஷா பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம்.

கிராமப்புறப் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அழைத்துச் செல்லுதல், கருத்தடை சாதனங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்கிறோம். எனினும், நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, எங்களை சுகாதாரத்துறையில் பணி நிரந்தரம் செய்து, மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும்.

மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து ஆஷா பணியாளர்களுக்கும் கரோனா கால நிவாரணத் தொகையாக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். மாநில சுகாதாரத் துறையின் மூலம் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் கிடைக்காத சமயத்தில் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளதால், இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்