மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் கடந்த 17 மாதங்களாக நடைபெறவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் இறுதி வாரத்திலிருந்து தொடங்கிய கரோனா பொதுமுடக்கத்தால், பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் மக்கள் குறைதீர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த பிப்ரவரி இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்த முடியாமல் போனது. பின்னர் கரோனா 2-வது அலை தொடங்கியதால் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத் தப்பட்டது. தற்போது படிப்படியாக, தளர்வுகள் அளிக்கப்பட்டு திரையரங்கு திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.
கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர்ஆட்சியர் அலுவலகங்களில் நேற்று மனு அளிப்பதற்காக ஆட்சியர் வளாகத்திற்கு வெளியே மனுக்களுடன் மக்கள் திரண்டிருந்தனர். ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டு விட்டுச் சென்றனர். அப்போது அங்கு வந்த பெண்ணிடம் கேட்டபோது, கடந்த 4 மாதங்களாக 4 முறை பெட்டியில் மனு போட்டு வருகிறேன். இதுவரை கோரிக்கைக்கு பதிலேதும் இல்லை என்றார். இதேபோன்று பலரும் தங்களது நிலையை கூறினர்.
அப்போது அங்கிருந்த வருவாய்த்துறை மேற்பார்வையாளரிடம் கேட்டபோது, "நேரிடையாக மனுக்கள் பெறும்போது சுமார் 400 முதல் 450 மனுக்கள் வரை பெறுவோம். தற்போது பெட்டியில் செலுத்தப்படும் மனுக்கள் 250- ஆக குறைந்துள்ளன. அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் வருகின்றன. இவற்றை ஆட்சியர்கள் பார்வையிட்டு, அந்தந்த துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கிறார். எனவே மனுக்கள் மீதான நடவடிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சில தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
அப்போது அங்கிருந்த நபர், எல்லாவற்றுக்கும் தளர்வு கொடுத்து வருகின்றனர். மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக நடத்தப்படும் கூட்டத்திற்கு அனுமதி அளிக்காதது ஏன் என்பது புரியவில்லை. புதிய அரசின் கவனத்திற்கு இதை யார் கொண்டு செல்வது எனத் தெரியவில்லை என்றார் வேதனையோடு.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago