தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை குடிநீர்த் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாநிலம் தழுவிய அளவில் ஆட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், 2000-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டி இயக்குபவர்களுக்கு 1.10.2017 முதல் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
2000-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்டி ஊதியமாக ரூ.3,200 மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். கரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேல்நிலை குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய மாதந்தோறும் ரூ.700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.எஸ்.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.சிவராஜன், ஒருங்கிணைப்புக் குழு மாநிலச் செயலாளர் எம்.பன்னீர்செல்வம், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் என்.அழகர்சாமி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க பொருளாளர் எம்.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.தர், உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.திரவியராஜ், பொருளாளர் வி.காயாம்பூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சி.முருகேசன் தலைமை வகித்தார். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago