நாகை, மயிலாடுதுறை, கரூர், திருச்சி அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையம் நேற்று தொடங்கியது.
நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையத்தை ஆட்சியர் அருண் தம்புராஜ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறியது:
நாகை மாவட்டத்தில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை 2,13,980 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 31,714 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
அடுத்த ஒரு வாரத்துக்கு நடைபெறும் தீவிர தடுப்பூசி முகாம்களில், வருவாய், ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, காவல்துறை, பள்ளிக் கல்வித் துறை, அனைத்து அரசு துறை சார்ந்த ஊழியர்கள், சுய உதவிக்குழுவினர், வணிகர் சங்கங்கள், அனைத்து அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, நாகையை கரோனா 3-ம் அலை பாதிக்காத மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வி.விஸ்வநாதன், அரசு மருத்துவமனை நிலைய அலுவலர் உமா மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையத்தை ஆட்சியர் லலிதா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 2,15,931 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 35,387 பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர். தற்போது, போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால், பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் மகேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் சரத்சந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரூர் அரசு பழைய தலைமை மருத்துவமனையில் 24 மணி நேர கரோனா தடுப்பூசி மையத்தை ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.முத்துச்செல்வன், மருத்துவர்கள் தெய்வநாதன், நந்தகுமார், கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 24 மணி நேர கரோனா தடுப்பூசி மையத்தை டீன் கே.வனிதா நேற்று தொடங்கிவைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago