ராமநதி தென்கால் பாசனப் பகுதியில் நெற்பயிர்கள் நோய்த்தாக்குதலால் கடும் பாதிப்படைந்துள்ளதாக, விவசாயிகள், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடையம் ஒன்றியம் ராமநதி தென்கால் பாசனப் பகுதியில் 1,600 ஏக்கரில்நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கார் பருவத்துக்கு ஏற்றரகம் என்று வேளாண் அலுவலர்களால் பரிந்துரைக்கப்பட்ட அம்பை-16 ரகம் நெல் சாகுபடி செய்து 60 நாட்கள் ஆகின்றன.
கோவிந்தபேரி, மீனாட்சிபுரம், ராமலிங்கபுரம், ராஜாங்கபுரம், மந்தியூர், பிள்ளைகுளம், அகம் பிள்ளைகுளம், செட்டிகுளம் ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிரில் பூஞ்சை நோய் தாக்கியுள்ளது. வேளாண்துறையால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தெளித்தும், உரங்களிட்டும் நோய் கட்டுப்படவில்லை. நெற்பயிர் அடிப்பொதி கருகி, கதிர் வரவில்லை. இதனால், சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும்நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
ஆலை குறித்து புகார்
மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ‘மத்தளம்பாறை, விவேகானந்தர் தெரு, ஆசாத் நகர் புதுமனை காலனி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்வசிக்கின்றனர். இங்கு, குடியிருப்புப் பகுதியில் அலுமினிய பட்டறை ஆலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.அங்கு எரிக்கப்படும் ரசாயனக் கழிவுகளால் நச்சுப்புகை ஏற்பட்டு காற்று மாசுபடுகிறது. பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
சரக்கு ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் கன்டெய்னர் லாரிகளை கொண்டுவந்து, பல மணி நேரங்கள் சாலையில் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மக்களுக்கு இடையூறாக உள்ள இந்த ஆலையை குடியிருப்புப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
நெல் கொள்முதல்
ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அளித்துள்ள மனுவில், ‘எங்கள் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம்செயல்பட்டு வந்ததால் இடத்தின்உரிமையாளரும், வியாபாரிகளுமே பயனடைந்தனர். எங்கள்ஊரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள்
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சின்னச்சாமி அளித்துள்ள மனுவில், ‘கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.700 வீதம் மாதம்ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.3 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைக் காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். குடிநீர் ஆபரேட்டர்களுக்கு ரூ.1,400 ஊதிய உயர்வுக்கான அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும். அவர்கள் ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago