பயிர்களுக்கு காப்பீடு செய்யாவிட்டாலும் இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தெரிவித்தார்.
கடலூர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியது:
சிலர் காழ்ப்புணர்ச்சியால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், நடப்பு குறுவை பருவத்திற்கான பயிர்க்காப்பீடு ஏன் அறிவிக்கவில்லை என்று விமர்சனம் செய்கின்றனர். ஆனால் குறுவையில் நல்ல சாகுபடி உற்பத்தியாகியுள்ளது. முந்தைய அதிமுக அரசு பயிர்க்காப்பீடு செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. இதனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் காப்பீடு நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக 3 முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதனை இறுதி செய்வதற்கான கால அவகாசத்திற்குள் 4.90 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதுவரை, 54 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு 3.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் குறுவை சாகுபடி முடியவுள்ளது. எனவே, இனிமேல் குறுவை சாகுபடிக்கான காப்பீடு தேவைப்படாது. எனினும், காப்பீடு இல்லாவிட்டாலும் பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து உள்ளார். எனவே, குறுவைக்கான காப்பீடை விவசாயிகள் கேட்கவில்லை.
2020-21 ம் ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் உள்பட பல்வேறு பயிர்களுக்கு மாநில அரசு செலுத்த வேண்டிய பிரிமியம் ரூ.1,248.92 கோடியை கடந்த 16-ம் தேதி தான் அரசு விடுவித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.1,500 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளன. விரைவில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு பாக்கி தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள நிலுவையில் ரூ.220 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. உரத் தட்டுப்பாடு இல்லை. தேவைப்படும் இடங்களுக்கு தேவையான அளவு அனுப்பி வைக்கப்படுகிறது. மற்ற பயிர்களுக்கு காப்பீட்டு பிரிமியம் செலுத்த வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும். கால நீட்டிப்பு செய்யும் வாய்ப்பு இல்லை. கூட்டுறவு கடன் சங்கங்களில் வழக்கம் போல அனைத்து கடன்களும் வழங்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியின் போது கூட்டுறவு கடன் சங்கங்களில் தலைவர்களாக பொறுப்பேற்றவர்கள் தான் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இந்த அரசு எப்போதும் விவசாயிகளின் நலனில் அக்கரையுள்ள அரசாக இருக்கும் என்றார். மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம், காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், கடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன், திமுக நிர்வாகிகள் பி.பாலமுருகன், ராஜா, நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago