கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வால் கறிக்கோழி விலை ஏற்றம் கண்டு கிலோ ரூ.220 முதல் ரூ.240 வரை விற்பனையாகிறது.
நாமக்கல் மண்டலத்தில் 1.5 கோடி கறிக்கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இவை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது ஒரு கிலோ கறிக்கோழி பண்ணைகளில் உயிருடன் ரூ.80 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இறைச்சிக் கடைகளில் ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டன. பின்னர் விலை படிப்படியாக ஏற்றம் கண்டு தற்போது பண்ணைகளில் கறிக்கோழி விலை உயிருடன் ரூ.118வரை விற்பனை செய்யப்படுகிறது. இறைச்சிக் கடைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையானது. நேற்றுமேலும் விலை உயர்ந்து கிலோ ரூ.220 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையேற்றம் இறைச்சிப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழித்தீவனங்களான மக்காச்சோளம், கம்பு, சோயா உள்ளிட்டவற்றின் விலை இரு மடங்கு ஏற்றம் கண்டதால் கறிக்கோழி உற்பத்தி செலவு மிகுந்துள்ளது. இதனால் இறைச்சிக் கோழி விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இதுபோல் பண்ணைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இறைச்சி விற்பனைக் கடைகளிலும் கறிக்கோழிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, என கோழி இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago