நான்கு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் இன்று (ஆக.23) திறக்கப்படுவதைத் தொடர்ந்து, திரையரங்குகளை சுத்தம் செய்து தயார்படுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றன.
தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டன. அதன்பிறகு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், 250 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கரோனா 2-வது அலை உருவானதால் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன. அதன்பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்துவந்தது. திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என, திரைத் துறையினர் கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து
4 மாதங்களுக்கு பிறகு இன்று (ஆக.23) முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 19 திரையரங்குகள் உள்ளன. இவைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், நேற்று காலை முதல் திரையரங்குகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருக்கைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒவ்வொரு இருக்கைக்கும் இடையில் ஒரு இருக்கையை காலியாக விடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் திரையரங்குகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago