41 மாத பணி நீக்க காலத்தை - பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் : சாலை பணியாளர் சங்க செயற்குழுவில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண் டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமை வகித்து, சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், “41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், உயிரிழந்த 300-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும், சீருடை, சலவைப்படி, விபத்துப்படி வழங்க வேண்டும், சாலை பராமரிப்பு பணியை தனியார் மூலம் மேற்கொள்ளும் அதிமுக அரசின் கொள்கை முடிவை ரத்து செய்து பராமரிப்பு பணியை சாலை பணியாளர்களே மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE