சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் கனமழை : சுற்றுச்சுவர் இடிந்ததால் போக்குவரத்து மாற்றம்

By செய்திப்பிரிவு

சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஏற்காட்டில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகப்பட்சமாக ஏற்காட்டில் 98 மிமீ மழை பதிவானது. மழையால் சில இடங்களில் மின் விநியோகம் தடைபட்டது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை (மில்லி மீட்டரில்) விவரம்: சங்ககிரி 37, சேலம் 25.50, ஓமலூர் 4 மிமீ மழை பதிவானது.

இதனிடையே, சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று அதிகாலை திடீரென கனமழை பெய்தது. பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை நீடித்தது.

மழையால், சேலத்தில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக வீதிகளில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால், அப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக் குள்ளாகினர்.

ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் அதிகாலையில் மழையின் வேகம் அதிகரித்து சில மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால் ஈரோடு சென்னிமலை சாலையில் ரயில்வே பணிமனை அருகே உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து சாலையில் விழுந்தது.

அப்போது அங்கிருந்த கழிவு ஆயிலுடன், மழைநீர் கலந்து சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. உடனடியாக, சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைப்போல் மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி பகுதியிலும் இரவில் பலத்த மழை பெய்தது.

இதுபோல் நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று காலை திருச்செங்கோட்டில் பலத்த மழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகளான சேலம் சாலை, சங்ககிரி சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்