கோழிப்பண்ணைகளை மீண்டும் வெள்ளைப் பிரிவுக்கு மாற்ற வலியுறுத்தல் : மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் பண்ணையாளர்கள் மனு

By செய்திப்பிரிவு

கோழிப்பண்ணைகளை மீண்டும் வெள்ளைப் பிரிவுக்கு (வொயிட் கேட்டகிரி) மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என மத்திய மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்பு இணையமைச்சர் எல்.முருகனிடம், தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி நிர்வாகிகள் மனு அளித்தனர்.

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

நாமக்கல் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமாக கோழிப்பண்ணையை நடத்தி வருகின்றனர். கோழித்தீவனமாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளம், கம்பு, சோளம், சோயா, கோதுமை, அரிசி போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. கோழிப்பண்ணைகளுக்கு இதற்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து இதுவரை ஒப்புதல், சான்றிதழ் பெற வேண்டிய நிலை இல்லை.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஓரிரு பண்ணைகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் நாடு முழுவதும் உள்ள கோழிப்பண்ணைகளின் தரத்தை முடிவு செய்து அனைவரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் வாங்கும்படி நிர்பந்தம் செய்கின்றனர். கோழிப்பண்ணைகள் கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வெள்ளை பிரிவில் இருந்தது. பின்னர் பச்சை பிரிவுக்கு (கிரீன் கேட்டகிரி) மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் மாற்றிவிட்டனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறும் நீர் மற்றும் காற்று மாசு என்பது கோழிப்பண்ணையில் ஏற்பட வாய்ப்பில்லை. இதில் சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரைத்து பழையபடி வெள்ளை பிரிவிலேயே கோழிப்பண்ணைகளை தொடர்ந்து நடத்த உதவி செய்ய வேண்டும். மத்திய தானிய சேமிப்பு கிடங்குகளில் இருக்கும் மனிதப் பயன்பாட்டிற்கு உதவாத கோதுமை, அரிசி போன்ற தானியங்களை பண்ணையாளர்களுக்கு சலுகை விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வடமாநிலங்களில் இருந்து கோழிப்பண்ணைகளுக்குத் தேவையான கம்பு, கோதுமை, சோளம், சோயா, மக்காச்சோளம் போன்றவற்றை சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு கொண்டு வர ஆகும் வாடகையை 50 சதவீதமாக நிர்ணயம் செய்தும், போக்குவரத்தில் முன்னுரிமையும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்