ஆகஸ்ட் 25, 26-ம் தேதிகளில் - தென்காசியில் தொழிற்கடன் பெற சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளில், புதிய தொழிற்சாலைகள் நிறுவவும், தற்போது இயங்கும் தொழிற் சாலைகளை விரிவுபடுத்தவும், உற்பத்தியை பன்முகப்படுத்தவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. புதிதாக கடன் பெறுபவர்கள் ரூ.30 கோடி வரை கடனாக பெற்றுக்கொள்ளலாம். நடைமுறை மூலதனமாக ரூ.2 கோடி வரை கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்று, தொழில் தொடங்க நீட்ஸ் (NEEDS) என்ற திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்கல்வி (ஐடிஐ) ஆகிய ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில் தொடங்குபவர் தங்களது பங்குத்தொகையாக 5 சதவீதம் மட்டுமே மூலதனமாக கொண்டுவர வேண்டும். மேலும் 25 சதவீத மானியத் தொகையுடன், 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறும் தொழில்களுக்கு, தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.

மாவட்ட தொழில் மையம்

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம், தென்காசி குத்துக்கல்வலசையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் வரும் 25, 26-ம் தேதிகளில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலர்களால் நடத்தப்படுகிறது. முகாமில் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தையும் பெற்றுக் கொள்ளலாம். முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப் படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் கடன் பெற தகுதியுடைய தொழில்முனைவோர்கள் விண்ணப்பங்களை www.tiic.org/application-forms-download/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ‘கிளை மேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், 5 C/5B, சகுந்தலா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி 627 003’ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இத்திட்டத்தில் விண்ணப்பிப் பது தொடர்பான விளக்கங்களுக்கு 94450 23492 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது bmtirunelveli@tiic.org என்ற மின்னஞ்சல் மூலமும் விளக்கங்கள் பெறலாம். இத் தகவலை, தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்