நெல்லை டவுனில் தொடர்ந்து நீடிக்கும் - போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எட்டப்படுமா? :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி டவுனில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக்கும் வகையில் பல்வேறு கட்டுமானங்கள் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இருக்கும் சாலைகளில் மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வாகனங்கள் அதிகரித்துவிட்ட நிலையில் இந்த சாலைகளில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலி டவுன் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. பாதாள சாக்கடை பணி, குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி என்றெல்லாம் மாநகரில் முக்கிய சாலைகள் உடைக்கப்பட்டு மணல்மேடிட்டுள்ளதால் அவதியுறும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலையும் தினமும் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி டவுண் காட்சி மண்டபம் முதல் வாகையடிமுனை வரை ஒரு வழிப்பாதையாகும். ஆனாலும் இந்த பாதையில் வாகன நெருக்கடி ஏற்படுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண போக்குவரத்து காவல்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் பல்வேறு யோசனைகளை தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் எம்.முஹம்மது அய்யூப் கூறியதாவது:

டவுன் காட்சி மண்டபம் முதல் சந்திப்பிள்ளையார் கோயில் முக்கு வரை இரண்டு, மூன்று சக்கர வாகனங்களை முழுமையாக அனுமதிக்கலாம். இப்படி அனுமதிக்கப்படும் வாகனங்கள் தெற்கு ரத வீதிக்குள் செல்லாமல் மேலரத வீதியில் செல்வதுபோல் திருப்பி விட வேண்டும். மேலும் பேட்டையிலிருந்து டவுண் நோக்கி வரும் இரண்டு, மூன்று சக்கர வாகனங்களை தவிர்த்து அத்தனை வாகனங்களையும் டிவிஎஸ் ஷோரூம் ( வழுக்கோடை பாதை) வழியாக திருப்பிவிட வேண்டும். அதேநேரத்தில் சந்திப்பிலிருந்து டவுண் நோக்கி வரும் வாகனங்களை ஆர்ச்சின் இடது புறம் இணைப்புச்சாலை வழியாகவும், பாரதியார் தெரு வழியாகவும் அல்லது அதையும் கடந்து வரும் வாகனங்களை குளப்பிறைத்தெரு வழியாக திருப்பி விட வேண்டும். மேலரதவீதி வழியாக செல்லக்கூடிய வாகனங்களை மட்டுமே தெற்கு ரத வீதிக்குள் அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறையை போக்குவரத்து காவல்துறை நடைமுறைப்படுத்தினால் வாகையடி முனையிலிருந்து காட்சி மண்டபம் வரை ஏற்படும் தேவையற்ற வாகன நெருக்கடியை தவிர்க்கலாம். இது தொடர்பாக மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் கே. சுரேஷ்குமாருக்கு மனு அனுப்பியுள்ளோம்.

டவுனில் நெருக்கடியை தவிர்ப்பதற்காக வாகனங்களை காட்சி மண்டபத்திலிருந்து தெற்கு மவுண்ட் சாலைக்கு திருப்பி விடுவோமானால் எதிரே அனுமதிக்கப்பட்ட பாதையில் வரும் வாகனத்தால் விபத்தும் நெருக்கடியும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோல், தெருக்குள்ளே வாகனத்தை திருப்பி விடுவோமானால் சிறு குழந்தை மற்றும் வயதானோருக்கு உயிர் பாதுகாப்பு கிடைக்காது. தெற்குரதவீதியின் வலது புறம் ( பார்க்கிங்கிற்கு எதிரே ) எவ்வித வாகனத்தையும் நிறுத்த அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்