குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் கருத்து

குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

தென்காசியில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து சென்னையில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.

மூடியுள்ள திரையரங்குகளை திறக்க வேண்டும். பள்ளிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை திறக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி, ஆயிரக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

சுற்றுலாத் தலங்களில் மூடப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகளுக்கு வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். வாடகை உயர்வு விவகாரத்தில் தமிழகம் முழுவதும் ஒரே சீரான முறையில் அமல்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருநெல்வேலியில் 3 பேருந்து நிலையங்களில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. காந்தி மார்க்கெட்டை அப்புறப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். 700-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அப்பகுதியில் உள்ளனர். இங்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட கடைகளை இன்னும் கட்டவில்லை. இதற்கு நிதியும் ஒதுக்கவில்லை. இருக்கும் கடைகளுக்கு வாடகையை உயர்த்தித் தர வியாபாரிகள் தயாராக உள்ளனர்.

சில தினங்களில் முதல்வரை சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்துவோம். வணிகர்களை முன்கள பணியாளர்களாகக் கருதி கரோனாவால் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்த உள்ளோம். தமிழகம் முழுவதும் வணிகர் சங்க பேரமைப்பு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE