வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி-முருகன் சந்திப்பு 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகனின் மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமை தினத்தில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசிக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் சிறை கைதி களுக்கான நேர்காணல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. இதனால், நளினி-முருகன் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டு வாட்ஸ்-அப் வீடியோ அழைப்புகள் மூலம் இருவரும் பேசிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, சிறை கைதிகளை உறவினர்கள் சந்தித்துக்கொள்ள கட்டுப்பாடுகளுடன் கடந்த 16-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நளினி-முருகன் சந்திப்புக்கும் சிறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
இந்நிலையில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி-முருகன் சந்திப்பு நேற்று காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையிலான காவலர்கள் முருகனை பாதுகாப் புடன் பெண்கள் சிறைக்கு நேற்று காலை அழைத்துச் சென்றனர்.
நேர்காணல் முடிந்ததும் முருகனை மீண்டும் பாதுகாப்புடன் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு நளினி-முருகன் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago