கரோனா தடுப்பு நடவடிக்கையாக - ஈரோட்டில் 24 இடங்களில் இன்றும், நாளையும் கடைகள் அடைப்பு :

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் 24 இடங்களில், இன்றும், நாளையும் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த 9-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பால், மருந்து போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் தவிர இதர கடைகள் மாலை 5 மணியுடன் மூடப்பட்டு வருகிறது. உணவகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி சாலை, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் சாலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.சாலை, மேட்டூர் சாலை, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி சாலை ஆகிய பகுதிகள் மற்றும் பவானி, அம்மாப்பேட்டை, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, தாளவாடி உள்ளிட்ட 24 இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இப்பகுதிகளில் இன்றும், நாளையும் (21,22-ம் தேதி) கடைகள் அடைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட 24 இடங்களில் தடையை மீறி கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE