அதிக விளைச்சல் மற்றும் விற்பனை வாய்ப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சின்ன வெங்காயம் சாகுபடியில் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில், பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சின்ன வெங்காய சாகுபடி பிரதானமாக உள்ளது.
நிகழாண்டு இதுவரை சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வைகாசி பட்டத்தில் விதைக்கும் சமயத்தில் கிலோ ரூ.70-க்கும் அதிகமாக விலைபோன சின்ன வெங்காயம், இப்போது கிலோ ரூ.15-க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி கூறியது: கடந்த ஆண்டு வேரழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. நிகழாண்டு விலை வீழ்ச்சியால் மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கல்லூரி, பள்ளி, தொழிற்சாலைகளின் உணவகங்கள் மூடப்பட்டிருப்பதாலும், தனியார் உணவகங்களில் வியாபாரம் குறைவு, ஏற்றுமதி நிறுத்திவைக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களாலும் சின்ன வெங்காயத்தின் பயன்பாடு குறைந்துள்ளது. அதேசமயம் இப்பகுதியில் நிகழாண்டு அதிக மகசூல் கிடைத்துள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
சின்ன வெங்காயம் பயிரிட ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. நன்றாக விளைந்தால் ஏக்கருக்கு 3,500 கிலோ மகசூல் கிடைக்கும். இப்போது கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விலை போகிறது. ஒரு லட்சம் செலவழித்து பாடுபட்டு விளைவித்து அறுவடை செய்து விற்பனை செய்தால் ரூ.60 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம்வரைதான் கிடைக்கிறது’’ என்றார்.
எனவே, செட்டிக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், விதை வெங்காயத்தை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago