பெரம்பலூர் அருகே கட்டப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய வீடுகளில் உள்ள குறைபாடுகளை சீரமைத்த பிறகே ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா தெரிவித்தார்.
தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் வீடற்ற ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் சில பகுதிகளில் பூச்சுகள் பெயர்ந்துள்ளதாகவும், வீடுகளுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்கு கட்டப்பட்டுள்ள தரைத்தளம், இரண்டடுக்கு மாடியுடன் கூடிய 504 குடியிருப்புகளில் தற்போது 440 பயனாளிகள் வசித்து வருகின்றனர். ஒரு சில குடியிருப்புகளில் ஆங்காங்கே சிறிய அளவில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளன. படிக்கட்டுகள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மற்றும் சுவற்றின் வெளிப்புறப்பூச்சுகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியிருப்பு கட்டிடங்கள் உறுதியாக இருப்பதாக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் யாரும் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை. குடியிருப்பு குறித்த புகார்களை எளிதில் தெரிவிக்கும் வகையில், முதல் பிளாக் பகுதியில் உள்ள 8-ம் எண் வீட்டில் தற்காலிக அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. மேலும், குடியிருப்புவாசிகள் உதவி செயற்பொறியாளரை தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம். குறைபாடுகள் உள்ளதாக கருதப்படும் வீடுகளை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகே ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2 கோடி வழங்கப்படும் என்றார்.
அப்போது, தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர் மா.அழகுபொன்னையா, உதவி செயற்பொறியாளர் நவனீத கண்ணன், உதவிப்பொறியாளர் ஷகிலா பீவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago