நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு - 209 மெட்ரிக் டன் நெல் விதை விநியோகம் : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கார் நெல் சாகுபடிக்கு 209 மெட்ரிக் டன் நெல் விதை விநியோகம் செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டு இயல்பான மழையளவு 814.80 மி.மீ . நடப்பு மாதம் வரையில் 626.68 மி.மீ பெறப்பட்டு ள்ளது. மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை நெல் 14,498 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறு தானியங்கள் 231 ஹெக்டேர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 1,340 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 499 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு 28 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 179 ஹெக்டேர் பரப்பளவிலுமாக மொத்தம் 16,775 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் மழைத்தூவான் ஆகியவை சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் சான்று பெற இம்மாவட்டத்தில் இரு நாட்களில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து நடத்திய முகாமில் 1,200 விவசாயி களுக்கு சிறு, குறு விவசாயி சான்று வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கார் நெல் சாகுபடிக்கு 209 மெட்ரிக் டன் நெல் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உயிர் உரங்கள் போதிய அளவு அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தரமான சான்று விதைகள், ரசாயன உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை வழங்கிடும் நோக்கத்துடன் இடுபொருட்களை உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் அவ்வப்போது வேளாண்மைத் துறையால் ஆய்வு செய்யப்பட்டு, தரமறியப்பட்டு, தரம் குறைந்த இடுபொருட்கள் விநியோகம் செய்தோர் மீது துறை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களான ராமையன்பட்டி, அம்பாசமுத்திரம், திசையன்விளை மற்றும் வள்ளியூர் ஆகிய ஊர்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களான நெல், பருத்தி, உளுந்து, நிலக்கடலை போன்ற வேளாண் விளைப் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யலாம். மேலும், விளைப்பொருட்கள் கிட்டங்கியில் இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு அவசர பணத்தேவைக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை அல்லது விளைப் பொருட்கள் மதிப்பில் 75 சதவீதம் பொருளீட்டு கடனாக 5 சதவீதம் வட்டியில் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுபாஷினி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அழகிரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார், வேளாண்மை துணை இயக்குநர் டெனிசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்