மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மானாவாரி மற்றும் இறவை பயிராக விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
தற்போது மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் தென்படுகிறது. இதனால் மகசூல் பாதிக்கும் வாய்ப்புள்ளது. மாவுப்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பல்வேறு பூச்சி தடுப்பு நடவடிக்கையை பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி அசாடிராக்டின் 1500 பிபிஎம் ஒரு லிட்டர் நீரில் 5 மி.லி. கலந்து பாதிக்கப்பட்ட செடிகளில் தெளிக்கலாம். அல்லது மீன் எண்ணெய் ரெசின் சோப்பு ஒரு லிட்டர் நீரில் 2 மி.லி. கலந்து 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
தேவையின் அடிப்படையில் சுழற்சி முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago