திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகிலுள்ள அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் பல்வேறு வசதிகளை அமெரிக்காவில் வசிக்கும் திருச்சியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் செய்து தந்துள்ளார்.
அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 239 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 21 ஆசிரியர்கள் உள்ளனர். இப்பள்ளிக்கு, திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருபவருமான எஸ்.மோகன், ரூ.50 ஆயிரம் செலவில் ஸ்மார்ட் கிளாஸ், ரூ.50 ஆயிரம் செலவில் பள்ளிக் கட்டிடங்கள் முழுவதும் வர்ணப்பூச்சு ஆகியவற்றை செய்து தந்துள்ளார்.
மேலும், இந்த கல்வியாண்டில் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்த 30 மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணமான தலா ரூ.1,100 வீதம் 30 மாணவர்களுக்கு ரூ.33 ஆயிரத்தையும் அவரே செலுத்தியுள்ளார்.
மேலும், பழுதடைந்துள்ள வேதியியல் ஆய்வகத்தை புதுப்பித்து, புதிய உபகரணங்கள் வாங்கவும், பள்ளியின் முகப்பில் சேதமடைந்துள்ள வளைவு மற்றும் கேட் ஆகியவற்றை சீரமைக்கவும் ஏறத்தாழ ரூ.1.75 லட்சத்தை தருவதாகவும் எஸ்.மோகன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த வசதிகளை செய்து கொடுத்த மோகனுக்கு பள்ளித் தலைமையாசிரியர் பரூக், ஓவிய ஆசிரியர் கே.அருண பாலன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதேபோல, கடந்த ஆண்டில் இதே பள்ளியில் பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர வசதியின்றி இருந்த 4 மாணவ, மாணவிகளுக்கு அவர்களது கல்லூரி படிப்புக்கான முழு கல்விக் கட்டணத்தையும் எஸ்.மோகன் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago