பெரம்பலூரில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட - குடிசைமாற்று வாரிய வீடுகளின் தரம் ஆய்வு :

பெரம்பலூர் அருகே அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகளின் தரம் குறித்து அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையத்தில் குடிசைமாற்று வாரியம் சார்பில் ரூ.41.07 கோடி மதிப்பில் 504 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டன. 2018-ல் தொடங்கிய கட்டுமானப்பணிகள் 2019-ல் நிறைவடைந்தன. கடந்த ஆண்டு கரோனா பேரிடர் ஏற்பட்டதால் இந்த குடியிருப்பு கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக செயல்பட்டது.

அதன்பின், கடந்த பிப்ரவரி மாதம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. இதில் தற்போது சுமார் 200 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து அங்கு அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதேபோல, கவுள்பாளையத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளும் தரமற்றதாக இருப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, அந்தக் குடியிருப்புகளை குடிசைமாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் வசந்த குமார், நிர்வாக பொறியாளர் அழகு பொன்னையா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். வீடு வீடாகச் சென்று சிமென்ட் பூச்சு, தரை, சுவர், கதவு, ஜன்னல், மின் சாதனங்கள், குழாய் அமைப்புகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், அவற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள் குறித்து உயரதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் எனவும், அவர்களின் பரிந்துரைப்படி அரசு முடிவு எடுக்கும் எனவும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE