இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் - கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் அறிவிப்பு : வாரியத் தலைவர் பொன்.குமார் தகவல்

By செய்திப்பிரிவு

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்.குமார் தெரிவித்தார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல வாரியத்தில் நிலுவையில் இருந்த 50,000 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் வாரியத்தில் ஆன்லைன் பதிவு முறையை எளிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 25,000 தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட உள்ளது.

ஏற்கெனவே வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை மீண்டும் வாரியத்தில் பதிவு செய்து, அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாக சென்று சேர்வதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் விபத்துகளால் இறப்பு நேரிடும்போது அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை, சுமார் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர் இணை ஆணையர் த.தர்மசீலன், தொழிலாளர் உதவி ஆணையர் வெ.தங்கராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்