``மகளிர் குழுக்கள் மூலம் பாரம்பரிய உணவு விற்பனை செய்யப்படும்” என்று, ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பாரம்பரிய உணவு விற்பனை வாகனத்தை கொடியசைத்து ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதல்படி, தனியார் நிறுவனத்தின் சார்பில், பாரம்பரிய உணவு விற்பனை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நவதானிய தோசை, கீரை சூப் வகைகள், சிறுதானிய வகை புட்டு, கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய உணவு வகைகள் இந்த வாகனத்தில் விற்பனை செய்யப்படும்.
உணவு பொருட்களை தயாரிக்க பயன்படும் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்பட மாட் டாது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை அந்தந்த உணவக உரிமையாளர்களிடம் பெற்றுக் கொண்டு அதற்கான தொகையை வழங்கி, மீண்டும் மறுசுழற்சி செய்து பயோ டீசலாக மாற்றுவதற்கான திட்டம் ஏற்கெனவே உள்ளது. இதுபோன்ற விற்பனை வாகனங்கள் அதிகரிக்கப்படும்.
மேலும், சுயஉதவிக் குழுக்கள் மூலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பாரம்பரிய உணவு பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த பாரம்பரிய உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணுசந்திரன், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சசிதீபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago