கோவையிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது :

By செய்திப்பிரிவு

கோவை உக்கடம் பெரியகடைவீதியில் உள்ள, பாழடைந்த கட்டிடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, பொள்ளாச்சி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், நேற்று முன்தினம் தகவல் கிடைத்த கட்டிடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். அங்கு கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அங்கிருந்த சிலரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில், பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, கடத்திச் செல்வதற்காக மூட்டைகளில் அவர்கள் தான் கட்டி வைத்தனர் என்பது தெரியவந்தது.

விசாரணையில் பிடிபட்டவர்கள் சாயிபாபாகாலனி அருகேயுள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்த முருகேஷ் பாண்டியன்(47), அன்னூரைச் சேர்ந்த வேலுச்சாமி(30), கண்ணப்பன் நகரைச் சேர்ந்த சிவா(33), பாலக்காட்டைச் சேர்ந்த பினேஷ்(22) எனத் தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த 4 டன் ரேஷன் அரிசி, கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்