இழப்பீட்டுத் தொகை வழங்காததால் - ஆதிதிராவிடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை நீதிமன்றஉத்தரவின்படி ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் அருகே உள்ள கெடாரை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி பத்மாவதி (55). இவருக்கு சொந்தமான ஐந்தரை ஏக்கர் நிலம் கடந்த 1999-ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அவருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 518 வழங்க அரசு முடிவு செய்தது. இழப்பீட்டு தொகையை உயர்த்திவழங்கும் படி விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் பத்மாவதி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பத்மாவதிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.24 லட்சத்து 88 ஆயிரத்து 277-ஐ ஆதிதிராவிடர் நலத்துறை வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்காவிடில் வட்டியுடன் சேர்த்து தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்படி வட்டியுடன் சேர்த்து ரூ.37 லட்சம் மட்டுமே பத்மாவதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள ரூ.11 லட்சத்தை வழங்காமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிதிராவிடர் நலத்துறை காலம் தாழ்த்தி வந்தது. இதனால் பத்மாவதி சார்பில் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், பத்மாவதிக்கு வழங்க வேண்டிய ரூ.11 லட்சத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆதிதிராவிடர் நலத்துறை வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த தொகைக்குரிய அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நேரிடும் என்று கடந்த கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் பத்மாவதிக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கவில்லை. இதையடுத்து நேற்று நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய பத்மாவதி, வழக்கறிஞர் தரணிவேந்தன்,முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சென்றனர்.

இந்நிலையில் அவர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 10 நாட்கள் அவகாசம் தரும்படியும், அதற்குள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களிடம் பேசி இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்ற ஊழியர்கள், தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்